
மூச்சின்றி நகங்களால்
கல்லறையில் கீரிய
என் எண்ணம்!
புழுக்கள் தோய்ந்த
மிச்ச சதைநார்களில்
என் வெப்பம்!
உயிருடன் மூடப்பட்டு
குரல்வளை முறிந்த
என் கதறல்!
நிர்வாணமாய் இருளில்
யாருமற்ற பயத்தோடு
என் தனிமை!!
உதித்த துளி மாதங்களில்
உறங்கிப்போன சோகம்
அடைக்கிறது காற்றை
ஏன் இப்படி? எனக்கு மட்டும்!
புதைக்கப்போன காட்டில்
சவக்கற்கள் காட்டியது
ஆயிரம் அற்பாயுள்களை!
விதிப்பயனை வியந்தவாறு
விதைநிலத்தை முத்தமிட்டு
மனவரி(லி)களைப் பொறித்தேன்!
"சருகுகளே! சத்தம் போடாதீர்கள்!
பிஞ்சிலே துஞ்சிய என் காதல்
இங்கு கண்மூடி உறங்குகிறது"!
அகநானூறறியாத பிரிவொன்றில்
வகையான வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் காதல் பூக்காடு!
உடலும் ஒட்டாத இக்காதலுக்கு
உன்னதங்கள் உண்டு!
காதலில் வளைவுகள் பொதுநியதி
தொலைவுகள் புதுநியதி!
விசைப் பலகையில்
இதயத்தின் இசைத்துடிப்பு
சுட்டெலியின் க்ளிக்குகளில்
முத்த மழைபொழிந்து
இறுதியாகும் இளவேனில்!
உறைந்த பிணமாய்
கணிப்பொறிமுன் தவம்கிடந்து
வெரித்தவிழியில் பனித்துளி!
அவள் உள்ளங்கை கதகதப்பு
என் கணிப்பொறிக்குமானது!
மதுவாக உள்நிறைந்த மாலைநேரங்கள்
மணித்துளியாய்ப் போனது!